×

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர், அக்.18: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்து வருகிறது.  தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் பஸ் நிலையம், பேரூராட்சி வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குட்டி முன்னிலை வகித்தார். பள்ளி துணை தலைமை ஆசிரியர் காமாட்சி வரவேற்றார்.

டெங்கு காய்ச்சல் உருவாவது எப்படி, அதனை தடுக்கும் வழிமுறைகள், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், ஏடிஎஸ் கொசு உருவாகும் இடங்கள் அவற்றை அறிந்து அதனை அழித்திடும் வழிமுறைகள், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின்றி ஊசியோ அல்லது மாத்திரையோ எடுத்து கொள்ளக் கூடாது.3 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் மழைநீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசோதனை செய்து அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Dengue Awareness Camp ,
× RELATED தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்