×

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கால்வாயில் திறந்துவிடப்படும் கழிவு நீரால் சேறும், சகதியுமாக மாறிய சாலை

கூடுவாஞ்சேரி, அக்.18: கூடுவாஞ்சேரி கே.கே.நகரில் திறந்தவெளியில் சாக்கடை நீரை திறந்துவிடுவதால் அப்பகுதி சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனை, பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், 11வது வார்டு கேகே நகர் பிரதான சாலை, 2வது தெரு, குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, கால்வாய்களில் திறந்துவிடுவதால் அப்பகுதி சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கேகே நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து சாக்கடை நீரை கால்வாய்களில் திறந்து விடுகின்றனர். அந்த கழிவுநீர் கால்வாயில் செல்ல வழியில்லாமல் கேகே நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள கால்வாயில் நிரம்பி வழிகிறது. இதனால், அப்பகுதி சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியதுடன்,கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதையொட்டி, சாலையில் நடமாடும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், சேற்றில் விழுந்து விபத்தை சந்திக்கும் அவலநிலை உள்ளது. ஏற்கனவே, இப்பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ளது. தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. மேலும், சாலைகளும் குண்டும், குழியுமாக நடக்க கூட முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இதுபற்றி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : apartments ,canal ,dirt road ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...