×

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அணியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவது நமது கடமை பாலபிரஜாபதி அடிகள் பேட்டி

தென்தாமரைக்குளம், அக்.18: அய்யா வழி அன்புகொடி மக்கள் இயக்க தலைவர் பாலபிரஜாபதி அடிகள் சாமித்தோப்பில் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும். வடமொழி ஆதிக்கம் உள்ளே புக முயற்சிக்கிறது. இதனை அனுமதித்தால் நாளை தமிழ் மெல்ல சாகும் என்ற சொல் இருக்காது, இலங்கையை போல தமிழ் செத்துவிட்டது என்ற நிலை கூட ஏற்படலாம். நமக்கு வேண்டியது தமிழர் உள்ளடங்கியவர்கள். தமிழ் இந்திய மொழி, தமிழ் தாய்மொழி, அந்த மொழி ஆட்சி மொழியாக, அரசு மொழியாக அனைத்து நடைமுறைகளிலும் செயல்படுத்த வேண்டும். இதனை யார் செய்வார்கள் என்றால் அதற்காக தமிழுக்காக குரல் கொடுக்கின்ற ஆற்றல் உள்ளவர்கள் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழால், தமிழுக்காக தியாகம் செய்த தென் குமரியில் பிறந்த அய்யா வழி அங்கமான நான் இன்றைய காலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகிற செயல்பாட்டை முன்னிறுத்தினால் தமிழ் மெல்ல வாழும் என்று சொல்லும் நிலை ஏற்படும். இது அரசியல் அல்ல. காலத்தின் கட்டாயம் என்று தமிழக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றுள்ள சூழலில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எந்த அணி தமிழகத்தை ஒருங்கிணைத்து ஆட்சி அமைக்க முனைகிறதோ அந்த அணியை ஆதரிக்க வேண்டியது, ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டியது நமது கடமை. அய்யா வழி யாருடைய தூண்டுதலுமின்றி தென் மாவட்டத்தில் எல்லா கிராமங்களிலும் இயல்பான இருப்பு உள்ளது. நாங்குநேரியில் பரவலாக அய்யாவழி மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு சுயமரியாதை தமிழ் உணர்வு உண்டு. ஒட்டுமொத்த மக்களும் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இயக்கத்தின் பிரதிநிதியாக இன்று போட்டியிடுகின்ற ரூபி மனோகரனை வெற்றிபெற செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது திமுக கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி உடனிருந்தார்.

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு
நாங்குநேரி  இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக  ரூபிமனோகரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சாமித்தோப்பு பால  பிரஜாபதி அடிகளார் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி  திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது குமரி  கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, ஆஸ்டின் எம்எல்ஏ,  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் தாமரைபாரதி, கிழக்கு மாவட்ட  பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் இருந்தனர்

Tags : governorate ,MK Stalin ,team ,
× RELATED 'பத்திரிகைகள் அவர்களின் கடமைகளை தான்...