×

முதல் முறையாக பேவர் பிளாக் அறிமுகம் குமரியில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க ₹20 கோடி ஒதுக்கீடு விரைவில் பணிகள் தொடங்க திட்டம்

நாகர்கோவில், அக்.18 :கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்க தமிழக அரசு a20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என தெரிகிறது.குமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இரணியல் - முட்டம் சாலை 98 லட்சம், சாந்தபுரம் ரோடு ரூ. 120 லட்சம், வட்டக்கோட்டை - ெகாட்டாரம் - அகஸ்தீஸ்வரம் சாலை ரூ.166 லட்சம், இரவிபுதூர் கடை - கருங்கல் ரோடு ரூ.120 லட்சம், கடையல் - பேச்சிப்பாறை சாலை ரூ.101 லட்சம், வெள்ளிச்சந்தை - திருநயினார்குறிச்சி சாலை ரூ.168 லட்சம், அருமனை - ஆற்றூர் ரோடு ரூ. 109 லட்சம், மாங்கோடு - கணபதியான்கடவு சாலை ரூ.85 லட்சம் உள்பட பல்வேறு சாலைகள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட உள்ளன. இந்த பணிக்கான டெண்டர் அடுத்த வாரம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட சாலைகளில் தான் பேவர் பிளாக் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை முதல் முறையாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேவர் பிளாக் பயன்படுத்த உள்ளனர். குமரி மாவட்டத்தில் கோழிப்போர்விளை முதல் முஞ்சிறை ரோட்டின் சாலை ஓர பகுதியில் சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு பேவர் பிளாக் பதிக்கப்பட உள்ளது. இதன் மூலம், சாலை ஓரத்தில் மண் அரிப்பை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். மார்த்தாண்டம், காளைசந்தை ரோட்டில் உடைந்து கிடக்கும் கான்கிரீட்டும் சீரமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் கூறுகையில், ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் a20 கோடி தமிழக அரசு குமரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 5 வருடங்கள் கடந்த சாலை மற்றும் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க உள்ளோம். இது தவிர மாவட்டத்தில் வெள்ளமடம் - தாழக்குடி மற்றும் தேரேகால்புதூர் - வீரநாராயண மங்கலம் சாலையில் சானல் கரை பகுதியில் சாலைகள் வளைவு நிலையில் செல்கிறது. இதுபோன்ற வளைவு உள்ள பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இவ்வாறு தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் 3 மீட்டர் அகலம் உள்ள சாலை , 7 மீட்டர் அகலம் வரை ஆகும். இதனால் சாலை அகலமாக தெரியும் என்றார்.குமரி மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை இருக்கும். எனவே இந்த கால கட்டத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள முடியாது. ஜனவரியில் தான் சாலை பணியை செய்ய முடியும் என்ற நிலையும் உள்ளது.

Tags : Introduction ,Kumari ,
× RELATED பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை...