×

குமரி மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் வாக்காளர் விபரங்கள் சரிபார்ப்பு கிள்ளியூர் தொகுதியில் 43 ஆயிரம் பேர் மட்டுமே சரிபார்த்தனர்

நாகர்கோவில், அக்.18: வாக்காளர் பட்டியலில் பெயர் விபரங்களை சுயமாகவே சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14.97 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 5.21 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் விபரங்களை சரிபார்த்துள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த முறை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் (voter verification scheme) என மாற்றப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி இப்பணிகள் தொடங்கப்பட்டது. வாக்காளர்கள் சுயமாகவே தங்களது பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக இணையதளங்கள், சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் ஆகும்.அந்த வகையில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வாக்காளர்கள் ‘NVSP’ என்ற இணையதளம், செல்போன் ஆப், 1950 என்ற தொலைபேசி எண், இ-சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்களில் சென்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர் மத்தியில் வருகை தந்து விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
 குறிப்பாக ஒரு வாக்காளர் தங்களது பெயர், முகவரி, வயது இவற்றில் திருத்தங்கள் இருப்பின் உடனே உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்துகொள்ளலாம். ஆன்லைனில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வாக்காளர் சேவை மையத்தில் நேரில் வழங்கியும் திருத்தங்கள் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று புகைப்படத்தையும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மாற்றி சரியாக உள்ளது என்பதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ள இயலும்.

 முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவற்றுக்கு ‘NVSP’ இணையதளத்தில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து மாற்றம் செய்யலாம். புதியதாக பெயர் சேர்ப்பு வசதியும் இதில் உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி 5 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தங்கள் விவரங்களை சரிபார்த்தனர். இதனால் முதலில் அக்டோபர் 15ம் தேதி வரையும், பின்னர் வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்துக்கான காலக்கெடு நவம்பர் மாதம் 18ம் தேதி வரையும் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 14 லட்சத்து 97 ஆயிரத்து 168 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 854 பேர் மட்டுமே இந்த வசதிகளை பயன்படுத்தி விபரங்களை சரிபார்த்துள்ளனர். இதில் என்விஎஸ்பி ஆப் வாயிலாக 375 பேரும், வாக்காளர் ஹெல்ப் லைன் வழியாக 4333 பேரும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக 5 லட்சத்து 5 ஆயிரத்து 445 பேரும், இ-சேவை மையங்கள் வாயிலாக 905 பேரும், 1950 என்ற எண் வாயிலாக 3052 பேரும், வாக்காளர் உதவி மையங்கள் வாயிலாக 7709 பேரும் தங்கள் விபரங்களை சரிபார்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 1250 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் துணை தாசில்தார்கள் தலைமையில் கிராமங்களில் முக்கிய பகுதிகளில் மொபைல் ஆப் வாயிலாக வாக்காளர்களை சந்தித்து அவர்கள் விபரங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களை புதியதாக விண்ணப்பிக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் விடுபட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 312 வாக்காளர்களில் இதுவரை 43 ஆயிரத்து 385 பேரின் விபரங்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இது மிக குறைவான ஒன்று ஆகும். வாக்காளர் பெயர்களை சரிபார்ப்பதில் ஆர்வம் குறைவாக இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களே இதுவரை மாவட்டம் முழுவதும் தங்களது பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு வாக்காளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
Tags : constituency ,Killiyoor ,district ,Kumari ,voters ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...