×

மக்களிடம் வாக்கு கேட்கும் அருகதை ரங்கசாமிக்கு இல்லை

புதுச்சேரி, அக். 18: புதுச்சேரி காமராஜர் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரான ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி நேற்று காலை கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி ரெயின்போ நகர் மற்றும் சுதந்திர பொன்விழா நகரில் வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது கிரண்பேடியை குறை கூறியே முதல்வர் நாராயணசாமி ஆட்சி செய்கிறார் என்று கூறுகிறார். சட்டமன்றத்துக்கு வருவதில்லை, மக்கள் பிரச்னை பற்றி பேசுவதில்லை, தேர்தல் வரும்போது மட்டும் ரங்கசாமி வருவார், தேர்தல் முடிந்த பிறகு வாட்சு கடையில் உட்கார்ந்திருப்பார். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றபோது நான் தேர்தலில் நின்று அமோக வெற்றி பெற்றேன்.

 அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றோம். இதன்மூலம் ரங்கசாமி கூறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் வேட்பாளர் கிடைக்காமல் ஒரு வேட்பாளரை பிடித்து நிறுத்தியுள்ளார். காமராஜர் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்களது வேட்பாளருக்கு கூட்டணி கட்சி பலமாக உள்ளது. வைத்திலிங்கம் இந்த தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்து நிறைய பணி செய்துள்ளார். ஜான்குமாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  மழை பாதிப்புகளை பார்வையிடாதவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கிறார். ரங்கசாமி ஒரு சந்தர்ப்பவாதி. அவரை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொகுதியில் ஓட்டு கேட்க அவருக்கு அருகதை கிடையாது. மேலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளார். அவருக்கு உறுதுணையாக ரங்கசாமி இருந்து வருகிறார்.

Tags : Rangasamy ,
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....