×

டெங்கு கொசு புகலிடமாக மாறிய விஏஓ, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகம்

மரக்காணம், அக். 18: விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நோயை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் பிளாஸ்டிக் டம்ளர், பேப்பர் கப், தேங்காய் மட்டை, டயர் போன்றவற்றில் தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீரில் இருந்து உற்பத்தியாகிறது. எனவே இதுபோன்ற பொருட்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி கொசுக்களின் உற்பத்தியை குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் மரக்காணம் பேரூராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பல அரசு துறை அலுவலகங்களை தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்துள்ளனர்.

மரக்காணத்தின் மையப்பகுதியில் வடக்கு, தெற்கு பகுதிகளுக்கான இரண்டு கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மையமும் உள்ளது. இந்த இடங்களுக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ஆனால் விஏஓ அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. இதுபோல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் பிடிக்கப்படும் மது கடத்தல் வாகனங்களை பல மாதங்களாக இங்கு நிறுத்திவைத்துள்ளனர். இந்த வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

மேலும் அப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்ற பொருட்கள் அதிகளவில் கிடக்கிறது. இது போல் இந்த இரண்டு அலுவலக வளாகங்களில் தூய்மை செய்யாமல் இருக்கும் பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொது மக்களை தாக்குகிறது. இதனால் இப்பகுதி பொது மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது.  எனவே இங்குள்ள விஏஓ அலுவலக வளாகம் மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் மற்றும் புதர்போல் காணப்படும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : VAO ,
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்