×

பழங்குடி இருளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

விழுப்புரம், அக். 18: இடைத்தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளிடம் பொன்முடி எம்எல்ஏ, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து போராட்டத்தை ரத்து செய்து திமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 10 இருளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து, அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். சித்ரவதை செய்து பொய் வழக்குப் போட்ட எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய அதிகாரிகள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி அந்ததொகுதிக்குட்பட்ட இருளர்கள் யாரும் வாக்களிக்காமல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில், பேச்சுவார்த்தைக்கு அழைத்து விடுக்கப்பட்டிருந்தது. பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கதலைவர் பேராசிரியர் கல்யாணி மற்றும் விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட 33 பொறுப்பாளர்களுடன் திமுக எம்எல்ஏ பொன்முடி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கைகளுக்கு திமுக தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து பழங்குடி இருளர்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்த தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை திரும்பபெற்றுக்கொள்வது எனவும், திமுக வேட்பாளர் புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்வதெனவும் பழங்குடி இருளர்கள் முடிவெடுத்துள்ளனர்.


Tags :
× RELATED பவானிசாகர் அருகே கிராமத்தில் தேர்தல்...