×

வன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான்

விக்கிரவாண்டி, அக். 18: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டியில் தவாக சார்பில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கும் சேர்த்து 28 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினார். ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். வன்னியர்களை மத்திய அமைச்சர்களாகவும், அரசு செயலர்களாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராகவும், பல்கலைக்கழக  துணை வேந்தராகவும் பணியமர்த்தி அழகு பார்த்தது திமுகதான்.

ஆனால் அதிமுக வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. முக்கிய பொறுப்பும் வழங்கவில்லை. ஆகவே வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக இடைத்தேர்தலிலும், அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். எனவே திமுக வேட்பாளர் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.பொதுக்கூட்டத்தில் திமுக தொகுதி பணிக்குழு தலைவர் பொன்முடி எம்எல்ஏ, ராஜா எம்பி, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், சுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குமரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Vanniyar ,
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது