கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சின்னசேலம், அக். 18: கல்வராயன்மலையில்  உள்ள நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் நீரில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா  பயணிகள் கார், வேன்களில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

விழுப்புரம்  மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, முண்டியூர் அருகே  கவ்வியம் நீர்வீழ்ச்சி, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. இதில்  பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும்  இடமாக உள்ளது. அதிலும் மேகம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல வேண்டுமானால்  நீண்ட தூரம் ஒத்தையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதைப்போல  முண்டியூர் அருகே உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சிக்கு செல்வதும் மிக கடினம்.  இதனால் மேகம், கவ்வியம்  நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமே செல்லும்.  ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலையின் ஓரத்திலேயே உள்ளதால்,  இந்த நீர்வீழ்ச்சிக்குத்தான் பாண்டி, கடலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து  அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கார், பஸ், டிராவல்ஸ் போன்ற வாகனங்களில்  வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.  இந்நிலையில்  கல்வராயன் மலைப்பகுதியில்  பெய்து வரும் மழையின் காரணமாக  மேகம், பெரியார்,  கவ்வியம், எட்டியாறு போன்ற நீர்வீழ்ச்சிகளில் சீரான நீர்வரத்து தொடங்கியது.  இதையொட்டி வெள்ளிமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள பெரியார்  நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் விழுப்புரம், கடலூர், பாண்டி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்து குளித்து  செல்கின்றனர்.
Advertising
Advertising

அதைப்போல கல்வராயன்மலை வனப்பகுதியின் உள்பகுதியில்  உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சிக்கும் மேகம் நீர்வீழ்ச்சிக்கும் ஏராளமான  இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கூட்டம் கூட்டமாக  சென்று ஆனந்த குளியல்  போட்டு செல்கின்றனர். கல்வராயன்

மலையில் உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சி  வனப்பகுதியின் உள்பகுதியில் இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சியை பற்றி வெளி  மாவட்டக்காரர்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த  நீர்வீழ்ச்சியும் குளிப்பதற்கு ரம்மியமான இடமாகும். அதனால் மாவட்ட  நிர்வாகம் கவ்வியம் நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை, நிழற்கூடம் கட்டி  சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பயணிகள்  எதிர்பார்க்கின்றனர். கல்வராயன்மலையை பொறுத்தவரை அரசு சுற்றுலாத்தலமாக  அறிவிக்காவிட்டாலும் கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான  சுற்றுலா பயணிகள் இங்குள்ள மேகம், கவ்வியம், பெரியார் நீர்வீழ்ச்சிகளுக்கு  சென்று  குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Related Stories: