×

வடகிழக்கு பருவமழை தொடங்கியது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம், அக். 18: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ெதாடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்று முன்தினம் தொடங்கியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவுமுதல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்தநிலையில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என வானிலைமையம் அறிவித்திருந்தது. கடந்த வாரம் கோடையின் தாக்கத்தைப்போலவே வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது வடகிழக்குபருவமழை பெய்யதொடங்கி பூமியை குளிர்வித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து காலையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபிறகு மீண்டும் மிதமான மழை பெய்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே கடும்வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில் இந்த பருவமழை கைகொடுத்தால் மட்டுமே வரும்காலங்களில் குடிநீர் பிரச்னை இருக்காது. இதனால் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பொதுப்பணித்துறைக்குச்சொந்தமான 71 ஏரிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏரிகளில் தண்ணீர்வரத்து வாய்க்கால்கள் முதலில் தூர்வாரப்பட்டுள்ளது. அதே போல் ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான ஏரி, குளங்களிலும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டநாட்களுக்குப்பிறகு மழைபெய்த நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

Tags : Northeast Monsoon ,public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...