கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விழுப்புரம்,  அக். 18: இனிப்பு, பலகார கடைகளில் கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து விழுப்புரம்  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து  இனிப்பு, பேக்கரி, பலகார உடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிப்பு,  பலகாரம் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான எண்ணெய், நெய்,  சர்க்கரை, வெல்லம், மாவுப்பொருட்கள் போன்றவற்றின் தரம் குறித்து  ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.  தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யுமிடங்களை சுத்தமாகவும், ஈக்கள்,  பூச்சிகள் மொய்க்கா வண்ணம் வைத்திருக்கவேண்டும்.

சமையலுக்கு பயன்படுத்தும்  எண்ணெய்யை மூன்று முறைகளுக்கு மேல் உபயோகப்படுத்தக்கூடாது. இனிப்புகளில்  அதிகப்படியாக செயற்கை வண்ணங்களை சேர்க்கக்கூடாது. உணவு கையாளுதல் மற்றும்  பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள் மற்றும் தலைமுடிக்கவசம்,  மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும்.உணவுப்பொருட்களை கையாளுபவர்கள்  உடற்தகுதியுடன் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை  கடைபிடிக்கவேண்டும். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: