×

பாளை. அரியகுளத்தில் பொதுக்கூட்டம் அதிமுக 50வது ஆண்டு விழாவிலும் தமிழகத்தை நாங்கள்தான் ஆள்வோம்

நெல்லை, அக். 18:  அதிமுக 50வது ஆண்டுவிழாவில் அடியெடுத்து வைக்கும் போதும் நாங்கள்தான் தமிழகத்தை ஆள்வோம் என பாளை அரியகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும் அதிமுகவின் 48வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும் பாளை அரியகுளத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் நாங்கள் பல சாதனைகளை படைத்துள்ளோம். சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்த எம்ஜிஆர் 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அதன்பின் ஜெயலலிதா 19 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தந்தார். இந்த இரு பெரிய தலைவர்களின் ஆசியோடு நாங்கள் நல்லாட்சி நடத்தி வருகிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 48 ஆண்டுகாலம் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக திகழ்கிறது. ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்டு அதிமுக எக்கு கோட்டையாக விளங்குகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் நெல்லைக்கு முக்கிய பங்கு உண்டு.  ஜெயலலிதா நெல்லையில் மாநாடு நடத்திய பின்னரே 2001ல் மீண்டும் முதல்வரானார். அந்த ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும் உதவியது நெல்லைதான். அதிமுக 50வது ஆண்டுவிழாவில் அடியெடுத்து வைக்கும்போதும் நாங்கள் தான் தமிழகத்தை ஆள்வோம்.

தொலைநோக்கு பார்வை கொண்ட அதிமுக அரசு, மக்களுக்கும் பெண்களுக்கும் பயனுள்ள ஏராளமான திட்டங்களை அள்ளி தந்துள்ளது. பெண்களுக்கு சமநீதி, சம பாதுகாப்பு என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் அவரது வழியில் நாங்கள் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றுவோம். தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு 2023க்குள் தரமான கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்கள் விரைவில் உருவாகும். அதிமுக அரசின் சாதனைகள் தொடர வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார், ராஜலட்சுமி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏகள் தேன்மொழி, ராஜன்செல்லப்பா, அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், தமிழ்மகன்உசேன், மாவட்ட செயலாளர்கள் மாநகர் தச்சை கணேசராஜா, புறநகர் கே.ஆர்.பி.பிரபா கரன், ஜெ.பேரவை ஜெரால்டு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு மகபூப்ஜான், நெல்லை பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் சுப்ரீத் சுப்பிர மணியன், மருதூர் ராமசுப்பிரமணியன், இட்டமொழி டென்சிங், கணபதி சுந்தரம், அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, டாஸ்மாக் லட்சுமணன், நத்தம் கண்ணன், அரியகுளம் செல்வராஜ், சேர்மபாண்டி, மதுரை மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் தமாகா சார்பில் யுவராஜா, விடியல்சேகர், கோவை தங்கம், சுத்தமல்லி முருகேசன், ஐயாத்துரை, வீரை மாரித்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.  தொடர்ந்து அவர் நடுவக்குறிச்சி, தருவை பகுதிகளில் திறந்த வேனில் சென்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Tags : Tamil Nadu ,General Meeting of Ariyakulam ,
× RELATED வலுப்பெறும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழை பெய்யும்