×

தூத்துக்குடியில் இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய தற்காலிக பஸ்நிலையம்

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடியில்  கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் தற்காலிக பஸ்நிலையம் வெள்ளக்காடாக  காட்சியளிக்கிறது. பயணிகள் கால்பதிக்க இடமில்லாமல் அவதிப்பட்டு  வருகின்றனர். இதனை கண்டித்து நேற்று மீன்
பிடிக்கும் போராட்டம் உள்ளிட்ட 3  போராட்டங்கள் நடைபெற்றது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக இரவு  மற்றும் அதிகாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி நகரத்தில்  பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக  தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பஸ்நிலையம்  மற்றும் அரசு போக்குவரத்துக்கழக டவுண் பணிமனை உள்ளிட்டவைகள் வெள்ளத்தில்  மிதக்கிறது. தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில்  புதுப்பித்து நவீன பஸ்நிலையமாக கட்டும்பணி துவங்கியுள்ளது. இதனால்  அதன் அருகில் இருந்த தனியார் பள்ளி மைதானத்தை தற்காலிக பஸ்நிலையமாக  செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள்  இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி மைதானமாக இருந்த இடத்தில் எந்தவித கட்டமைப்பு  பணிகளும் செய்யாமல் அப்படியே பஸ் நிலையமாக மாற்றப்பட்டதால் அடிப்படை  வசதிகள் எதுவுமில்லை. ஏற்கனவே மழைக்காலம் துவங்கும் முன்பு தற்காலிக  பஸ்நிலையத்தில் தார் சாலை அல்லது சிமெண்ட் சாலைகளுடன் கூடிய தளம்  அமைக்கவேண்டும். தளத்தை உயர்த்தவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள்  கூறிவந்தபோதும் அதை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை  துவங்கியுள்ளது.

இதையடுத்து கடந்த இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் தற்காலிக பஸ்நிலையம்  வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் கால் வைப்பதற்குகூட தரை  இல்லாத நிலையில் பயணிகள் கடுமையாக அவதிக்கு உள்ளாகினர். அத்துடன் பள்ளி, கல்லூரி மற்றும்  அலுவலகங்களுக்கு செல்வோர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் மற்றும் சகதியில் இறங்கி உடைகள்  நனைந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. மேலும் இரவு நேரத்தில்  மின்விளக்கு வசதியும் சரியாக இல்லாததால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திண்டாடி வருகின்றனர்.  இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் தற்காலிக பஸ்நிலையத்தின் அவலத்தை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக  வெளியேற்ற வேண்டும். தரைத்தளத்தை செப்பனிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாடுகளை குளிக்க வைக்கும் போராட்டம் நடத்தினர். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

  இதே போல் சமூக ஆர்வலர் வக்கீல்  தொண்டன் சுப்பிரமணியன் தலைமையில் மீன்பிடிக்கும் போராட்டம், நாற்று நடும்  போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 41வது வட்ட அமமுக செயலாளர்  காசிலிங்கம் உள்ளிட்டோர் மழை தண்ணீரில் குளிக்கும் போராட்டம் நடத்தினர்.  ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் அதிகாரிகள் யாரும்  கண்டுக்கொள்ளவில்லை. இதே போல் டவுண் போக்குவரத்துக் கழக பணிமனையிலும் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சூழ்ந்து நின்றதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே  தற்காலிக பஸ் நிலையத்தை மழை காலம் முடியும் வரை அல்லது பழைய பஸ்  நிலையம் புதுப்பிக்கும் பணி நிறைவு அடையும் வரை புதிய பஸ்  நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களையும் இயக்கவேண்டும் என பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Tuticorin ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி