தூத்துக்குடி மாநகரில் தொடர் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும்

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: கடந்த 20 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு நிலவுகிறது. தற்போது மழை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். மாணவ, மாணவிகளின் கல்வியும் மின்தடையால் பாதிப்புக்கு உள்ளாகிறது. பண்டிகை நெருங்கும் காலத்தில் ஏற்படும் இந்த மின்தடையால் வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பவர் மின்மாற்றி பழுதால் இவ்வாறு மாநகர் முழுவதும் தொடர் மின்தடை நிலவுகிறது. இதையடுத்து இதை சரிசெய்யுமாறு மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக கோரிக்கை வைத்தேன். ஆனால், இதுவரை பழுது சரி செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக மாற்று இடங்களில் இருந்து மின்சாரம் வாங்கி பகுதி வாரியாக பிரித்து மின் விநியோகம் செய்து வருவதாக தெரிகிறது. இது நிரந்தரத் தீர்வு ஆகாது.  எனவே, இதற்குப் பதிலாக எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள பவர் டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தூத்துக்குடி மாநகரில் நிலவிவரும் தொடர் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பொதுமக்களைத் திரட்டி மின்வாரிய அலுவலகம் முன் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: