ஏரல் அருகே கோயில் விழாவில் வாலிபரை வெட்டிய 4 மாணவர்கள் கைது

ஏரல், அக். 18:  தூத்துக்குடி  மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த உள்ள குலையன்கரிசலை சேர்ந்த ஆல்பர்ட்  மகன் சிலம்பரசன் (24), பொன்துரை மகன் அருணாசலம் (19), பிரபாகரன் மகன்  விக்னேஷ் (19), மணிராஜ் மகன் ரூபன் (18), ஆகியோர் கல்லூரி மற்றும்  பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்கள். விக்னேஷ் மட்டும் ஐடிஐ  முடித்துள்ளார்.  இவர்கள் 4 பேரும் கடந்த 15ம் தேதி ஏரல் அடுத்த மாரமங்கலம் எலும்பன் மாடசாமி  கோயில் கொடைவிழாவில் பங்கேற்றனர். அப்போது இவ்விழாவில் கலந்து கொண்ட அகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் பாண்டி என்ற  சேர்மபாண்டி (28) என்பவரது பைக்கை நேற்று முன்தினம் அதிகாலை 3  மணிக்கு மாணவர்கள் 4 பேரும் தள்ளி விட்டதாகத் தெரிகிறது.

 இதை பாண்டி  தட்டிக்கேட்ட போது அவருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறை கொடை விழாவிற்கு வந்தவர்கள் சமரசப்படுத்தினர். இதையடுத்து பாண்டி தனது பைக் அருகே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது  அங்கு சென்ற மாணவர்கள் 4 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் சரமாரியாக வெட்டினராம். இதில் படுகாயமடைந்த பாண்டி  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஏரல்  இன்ஸ்பெக்டர் பட்டாணி, 4 பேரையும் கைது செய்தார். அடுத்தடுத்த நடந்த சம்பவங்களால் கொடை  விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: