×

பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக உப்பாறு அணைக்கு உபரிநீர் திறக்க வேண்டும்

தாராபுரம், அக். 18:தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. இந்த அணை கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. அணைக்கு உட்பட்டு நேரடியாக 6 ஆயிரம் ஏக்கர் பாசனமும், மறைமுகமாக 5 ஆயிரம் ஏக்கர் பாசனமும் பெருகிறது.  இதுதவிர 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைக்கும் உப்பாறு அணை ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்வதில்லை. இதனால் அணைக்கு நீர் வரத்தும் இல்லை. தண்ணீர் கிடைக்காததால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பலர் இடம் பெயர்ந்து விட்டனர். தற்போதுள்ள விவசாயிகள் கால்நடைகளை நம்பிவே வாழ்ந்து வருகிறார்கள்.
விவசாய கிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. தற்போது அணைக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கால்நடைகள் வளர்ப்பு பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டத்தில், அதன் உபரி நீரை உப்பாறு அணைக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உப்பாறு பாசன விவசாயிகள் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் காளிமுத்து தலைமையில், நேற்று  தாராபுரத்தில் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது பெய்துவரும் பருவமழையின் காரணமாக சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிபள்ளம் மற்றும் திருமூர்த்தி அணை ஆகியவற்றில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் பி.ஏ.பி. பாசனப் பகுதிகளில் பரவலாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பி.ஏ.பி. கால்வாயின் தண்ணீர் வீணாக வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது. பி.ஏ.பி. கால்வாயின் பாசனத்திட்டத்தில் இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயத்திலிருந்து விடுபட்டுள்ளது. எனவே உப்பாறு பாசன விவசாயிகளுக்கு உயிர் தண்ணீர் கிடைக்கும் வகையில், பி.ஏ.பி. கால்வாயின் உபரி நீரை, பிரதான கால்வாயின் அரசூர் பகுதியிலிருந்து உப்பாறு அணைக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உப்பாறு பாசன கால்வாய்களை குடிமராமத்து திட்டத்தில் உடனடியாக தூர்வார வேண்டும்.

Tags : Upparu Dam ,
× RELATED தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய்...