×

பயிர் காப்பீட்டுத் தொகையை கடனில் வரவு வைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்

மன்னார்குடி, அக்.18: கூத்தாநல்லூர் அருகே விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் காப்பீட்டுத் தொகையை விவசாய கடனில் வரவு வைப்பதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கஜா புயலில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் காப்பீட்டுத் தொகையை விவசாய கடனில் வரவு வைக்கும் அதிகாரிகள் முயற்சியை கண்டித்தும், பயிர்கடனில் எந்தவித பிடித்தம் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான பயிர் காப்பீடு வழங்க கோரியும், காப்பீட்டு தொகை வழங்குவதில் அதிகாரிகள் குளறுபடிகள் செய்வதை மாவட்ட அதிகாரிகள் சரி செய்ய கோரியும், எவ்விதமான நிபந்தனைகள் இன்றி விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், பயிர் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் கடும் நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், விடுபட்ட கிராமங்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூத்தாநல்லூர் நகரம், மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றிய குழுக்களின் சார்பில் மன்னார்குடி- திருவாரூர் நெடுஞ்சாலையில் லெட்சுமாங்குடி பாலம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்கள் மன்னை வீரமணி, நீடாமங்கலம் நடேச தமிழார்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தவபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் வை. செல்வராஜ், நகர செயலாளர் சுதர்சன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த திருவாரூர் டிஎஸ்பி நடராஜன், தாசில்தார் மலர்க்கொடி மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ள தாக தாசில்தார் மலர்கொடி கூறியதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதனால் மன்னார்குடி- திருவாரூர் இடையே சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Anti-Farmers ,Union Road ,
× RELATED ஓஎம்ஆர் சாலையில் உள்ள 5...