×

காற்று மாசு படுவதை தடுக்க கேர்ன்ஹில், அவலாஞ்சியில் மரக்கன்று நடவு பணி தீவிரம்

ஊட்டி, அக்.18: காற்று மாசுபடுவதை தடுக்க கேர்ன்ஹில், அவலாஞ்சி மற்றும் எல்கில் பகுதியில் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியே குப்பை மலைபோன்று காட்சியளிக்கிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மாசடைய செய்கிறது. ேமலும், இங்கு கொட்டப்படும் பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் குப்பை தளத்தை சுற்றிலும் உள்ள சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது காற்றில் கலப்பதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசடைந்த பல்வேறு பிரச்னைகள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், காற்று மாசை தடுக்கும் நோக்கில் தற்போது நீலகிரி வனத்துறையினர் புதிய முயற்சியை துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் ஆயிரம் சோலை மரக்கன்றுகளும், எல்கில் பகுதியில் ஆயிரம் சோலை மரக்கன்றுகளும் மற்றும் அவலாஞ்சி பகுதியில் 3 ஆயிரம் சோலை மரக்கன்றுகளும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமாகியவுடன் வெளியில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதனால், இப்பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.  இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தீட்டுக்கல் குப்பை கொட்டும் இடத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் குப்பை கொட்டும் இடத்தை சுற்றியுள்ள கேர்ன்ஹில், எல்கில் மற்றும் அவலாஞ்சி ஆகிய வனங்களில் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். கேர்ன்ஹில் மற்றும் அவலாஞ்சியில் நடவு பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் எல்கில் பகுதியில் நாற்று நடவு பணிகள் துவக்கப்படும் என்றார். காற்று மாசை தடுக்க தற்போது நீலகிரி வனத்துறையினர் எடுத்துள்ள முயற்சி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Cairnhill ,Avalanche ,
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு...