×

ஆபத்தை உணராமல் மண் சரிவு பகுதியில் செல்பி எடுக்கும் கல்லூரி மாணவர்கள்

ஊட்டி, அக்.18: ஊட்டி-மஞ்சூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த  இடத்தில் கல்லூரி மாணவிகள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டது பலரையும் முகம்  சுழிக்க வைத்தது. ஆன்ட்ராய்டு மற்றும் ஸ்மார்ட் போன்கள் வந்த பின்  பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் செல்பி மோகத்தில் எதனை எடுப்பது,  எதனை எடுக்கக்கூடாது என்றுக் கூட தெரியாமல் எடுத்து வலைத்தளங்களில்  பதிவிடுவதால் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த செல்பி மோகம்  இளைஞர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் மட்டுமின்றி, சிறிய குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை உள்ளது. இந்த செல்பி மோகத்தால் சில சமயங்களில் பெரிய  அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆற்றின் நடுவே, மலை உச்சி, கட்டிடத்தின்  உச்சி மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் போன்ற பகுதிகளில் செல்பி  எடுக்க செல்பவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனையும் நாம்  செல்போன்களில் வரும் வீடியோக்கள் மூலம் பார்த்து வருகிறோம்.  ஆனாலும்,  இந்த செல்பி மோகம் யாரையும் விட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று  ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் மேரிலேண்ட் பகுதியில் பெரிய  அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனை அகற்றும் பணியில் ஜேசிபி., இயந்திரம்  ஈடுபட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பல இடங்களில் மரங்கள் விழும்  நிலையில் இருந்தன. மீண்டும் அப்பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம்  இருந்தது. இதனால், மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேசிபி.,  இயந்திரம் அருகே செல்ல அனைவரும் அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றுக்  கொண்டிருந்தனர். ஆனால், அப்பகுதிக்கு வந்த சில கல்லூரி மாணவிகள்  நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அறிவுரையை மதிக்காமல் மண் சரிவு ஏற்பட்ட  இடத்திற்கு சென்றனர். பின் அங்கு வீடியோ எடுப்பதும், செல்பி  எடுப்பதுமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட போலீசார் சிலர்,  அங்கிருந்து மாணவிகளை செல்லும்படி அறிவுரை வழங்கினர். அதன் பின்னரே  அங்கிருந்து மாணவிகள் சென்றனர். மாணவர்களை காட்டிலும், மாணவிகள் அனைவரும்  செல்போன்கள் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டு தங்களது  பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டனர். விபத்தை அறியாமல், இது  போன்று மாணவிகள் செல்வதை தவிர்க்க சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம்  மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

Tags : College students ,area ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...