×

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் அரசு நடத்த வேண்டும் கரூரில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி

கரூர்: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை அரசு நடத்த வேண்டும் என்று கரூரில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, டெங்கு மற்றும் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். டெங்கு மற்றும் சாதாரண காய்ச்சல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தாமக இளைஞரணி தலைவர் யுவராஜா மற்றும் நிர்வாகிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பிஸ்கட், பிரெட் போன்றவற்றை வழங்கினர். தொடர்ந்து யுவராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமாகா சார்பில் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உதவிகள் வழங்கி வருகிறோம். இதனடிப்படையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டோம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு போன்ற காய்ச்சல்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டாலும், நிலவேம்பு கசாயம் வழங்குவதற்கும் அரசு சார்பில் முகாம் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனை பகுதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமினை துவங்கி நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் காரணமாக, ஏழை எளிய பொதுமக்கள், ரத்த பரிசோதனை செய்வதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்களின் குறையை போக்கும் வகையில், தமிழக அரசே, அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இலவசமாக ரத்த பரிசோதனை முகாம்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் கூட்டணி கட்சியே வெற்றி பெறும். சீமானின் பேச்சு தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகிறோம். அரசியல் லாபத்திற்காக பேசியதை கண்டிக்கிறோம்.உள்ளாட்சி தேர்தல் இந்தாண்டுக்குள் நடைபெறும். தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அந்த தேர்தலிலும் எங்கள் கூட்டணி கட்சியினரே வெற்றி பெறுவார்கள் என்றார்.மாநில நெசவாளர் அணி தலைவர் ராஜேஷ், கரூர் மாவட்ட தமாகா இளைஞரணி தலைவர் யுவராசா உட்பட அனைத்து நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Tags : government ,places ,land-grant camp ,public ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்