×

இந்தியாவில் முதன்முறை குளித்தலை நகரில் டெங்கு தடுப்பு பணிகள்

குளித்தலை: குளித்தலை நகரில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று குளித்தலை நகரத்தில் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது எம் பி எஸ் அக்ரஹாரத்தில் உள்ள பள்ளி, வீடுகளில் தண்ணீர் தொட்டி, சுற்றுப்புறம் சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும் பள்ளி தலைமையாசிரியரிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி மாணவர்களிடையே விளக்கி கூற வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பிறகு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாரியம்மன் கோயில் தெரு, பஜனை மடம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவிகளிடம் வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை கலெக்டர் அன்பழகன் வாசிக்க மாணவிகள் திருப்பி கூறி உறுதி மொழி ஏற்றனர்.

அதில் நான் எனது வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போட மாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் இருந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். மேலும் எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசு புழு வராமல் தடுப்பேன். நான் கற்றுக் கொண்டவற்றை அண்டை அயலாருக்கும் கற்றுக்கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உருவாகாமல் பார்த்துக்கொள்வேன்.

தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என கூறி உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குளித்தலை அரசு மருத்துவமனை காய்ச்சல் வார்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்து மருத்துவமனையை சுற்றி ஆய்வுசெய்து தினந்தோறும் மருத்துவமனையில சுற்றுப்புற சுகாதாரம் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட மருத்துவ அலுவலர் பாக்கியலட்சுமி, குளித்தலை தலைமை அரசு மருத்துவர் ஸ்ரீகாந்த், வட்டாட்சியர் மகாமுனி, ஆணையர்(பொ) புகழேந்தி, மண்டல துணை வட்டாட்சியர் வைர பெருமாள், சுகாதார ஆய்வாளர் முகமது இஸ்மாயில், அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா, விஏஓ ஸ்டாலின் பிரபு மற்றும் வருவாய் துறை, நகராட்சி, அரசு மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags : India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!