மாநகரில் கொட்டி தீர்த்தது பருவமழை

கோவை, அக்.18: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. நேற்று மாலை பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாக வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் இந்த மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

Advertising
Advertising

கொட்டி தீர்த்த கனமழையினால், கோவை ரயில் நிலையம், லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் கீழ்பகுதி, வடகோவை மேம்பாலம் பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், வடகோவை சிந்தாமணி, சாய்பாபாகோயில், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் சாலையில் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.  அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் சாலையில் என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Stories: