உலக எலும்பு அடர்த்தி குறைபாடு தினம் 400 பேருக்கு பரிசோதனை

கோவை, அக். 18:கோவை அரசு மருத்துவமனையில் உலக எலும்பு அடர்த்தி குறைபாடு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் அக்டோபர் 20ம் தேதியை உலக எலும்பு அடர்த்தி குறைபாடு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. எலும்பு அடர்த்தி குறைபாடு ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறிகளும் தெரியாது. இதனால், இதனை ‘சைலண்ட் நோய்’ என்கிறனர். இதற்கு ஆஸ்திரியோ பினியா என பெயர். இதனை கண்டறிந்தால், உணவு பழக்க வழக்கம், நடைப்பயிற்சி, கால்சியம் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதனை கண்டறியாமல் விட்டால் எலும்பு அடர்த்தி குறைபாடு அதிகமாகி ஆஸ்திரியோ புரோசிஸ் ஏற்படும். இதனால், சிறிய சம்பவங்களினால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இது கை மணிகட்டு, இடுப்பு எலும்பு, முதுகுதண்டுவட எலும்பு பகுதியை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை எலும்பு அடர்த்தி குறைபாடு கண்டறியும் கருவி(பிஎம்டி), எக்ஸ்ரே கதிர்வீச்சு முறையில் டெக்ஸா கருவி உதவியுடன் கண்டறியலாம்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உலக எலும்பு அடர்த்தி குறைபாடு தொடர்பாக கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், உடலியல் துறை உதவி பேராசிரியர் மூர்த்தி, ரேடியாலஜி துறை பேராசிரியர் முரளி, மருந்தியியல் துறை உதவி பேராசிரியர், எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவு நிறுவனத்தின் இயக்குனர் வெற்றிவேல் செழியன், இணை பேராசிரியர் ராம்பிரசாத், பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய மருந்துகள், கண்டறிவது குறித்து மருத்துவ மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் பிஎம்டி கருவியின் மூலம் செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் உள்பட 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் பரிசோதனை நடக்கிறது.

இது குறித்து எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவு நிறுவனத்தின் இயக்குனர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், “கடந்த ஆண்டு எலும்பு அடர்த்தி குறைபாடு குறித்து 8 ஆயிரம் பேருக்கு ஆய்வு செய்தோம். இதில், எலும்பு அடர்த்தி குறைபாட்டினால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்களுக்கும் எலும்பு அடர்த்தி குறைப்பாடு அறிகுறிகள் உள்ளது. இதனால், பொதுமக்கள் நடைப்பழக்கம், நல்ல உணவு பழக்கம், பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது அதிகரித்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதனால், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்” என்றார்.

Related Stories: