ெடங்கு நோயாளியை சிகிச்சைக்குப்பின் 4 நாட்கள் கண்காணிக்க உத்தரவு

கோவை, அக். 18: கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் பானுமதி, கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சந்தோஷ் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிப்பது, தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகளை, தொடர்ந்து 4 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் டெங்குவினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Advertising
Advertising

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது: மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது வரை உயிரிழப்பு எதுவும் இல்லை. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் 120 பேர் வரை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் நோயாளிகளுக்கு வார்டில் அரிசி கஞ்சி, ஓஆர்எஸ் கரைசல், நிலவேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தலின்பேரில் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க என தனியாக மூன்று வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் டெங்கு டெஸ்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பாதிப்பு என வரும் நபர்களுக்கு 27 வகையான டெஸ்ட் எடுக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நோயாளிகளை, அடுத்த 4 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். மேலும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘ஆண்டி டெங்கு டே’ கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலங்கள், கட்டிடங்களில் ஆய்வுகள் நடத்தி டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: