×

தீபாவளி பண்டிகையையொட்டி போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

ஈரோடு, அக். 18: தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்க 2 நடமாடும் காவல் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிகள் குறித்தும், முன்னேற்பாடு குறித்தும் எஸ்பி   சக்திகணேசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக வரும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாநகர பகுதிக்கு என தனியாக 2 நடமாடும் காவல் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2 வாகனங்கள் வாங்கப்பட்டு ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு எஸ்எஸ்ஐ மற்றும் 2 போலீசார் என 24 மணி நேரமும் ரோந்து செல்லும் வகையில் 2 ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மாநகர பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பண்டிகை காலம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மதுபானம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சட்டம், ஒழுங்கு போலீசாரும் இணைந்து செயல்படுவார்கள்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் முன்பு 60 கேமரா இருந்தது. தற்போது 250 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பல குற்றச்சம்பங்களில் சுலபமாக குற்றவாளிகளை கண்டறிய இந்த கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவியாக இருந்தது. வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக காட்டும் நுண் கேமரா ஈரோடு நகரில் 11 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. பெருந்துறையில் 15 இடங்களில் இதேபோன்ற கேமரா அமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 36 போலீஸ் ஸ்டேசன், 4 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன், ஒரு குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசன் என 41 போலீஸ் ஸ்டேசன் உள்ளது. புதிதாக, பெருந்துறையில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனும், திண்டல் பகுதியில் சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேசன் அமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சித்தோடு அருகே நல்லாகவுண்டன்பாளையம் பகுதியில் காவலர் கனவு இல்லம் திட்டத்தில் போலீசாருக்கு சொந்த வீடு கட்ட 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் மூலம் காவலர் வீட்டு வசதி கழக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Diwali ,
× RELATED விபத்தில்லா தீபாவளி மக்கள் மகிழ்ச்சி