×

அன்னை சத்யாநகரில் ரூ.30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு பழைய வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்


ஈரோடு, அக். 18: ஈரோடு பெரிய அக்ரஹாரம் அன்னை சத்யாநகரில் ரூ.30 கோடியில் கூடுதலாக 336 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதற்காக, பழைய வீடுகளை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கடந்த 1987ம்ஆண்டு ஈரோடு பெரியஅக்ரஹாரம் அன்னை சத்யாநகர் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது.  இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக 35 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டு பணம் செலுத்தியவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபகுதியில், 228 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் இதையும் இடித்து விட்டு புதியதாக 336 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இங்கு குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இடைக்கால நிவாரண தொகையாக தலா 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுவரை 180க்கும் மேற்பட்டோருக்கு இடைக்கால நிவாரண தொகை வழங்கப்பட்டு வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு வீடுகளை காலி செய்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட நிலையில் விரைந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்பதற்காக வீடுகளை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று பழைய அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கும் பணி துவங்கியது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும். பின்னர், நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை துவங்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் கூறுகையில்,`அன்னை சத்யாநகரில் ஏற்கனவே, 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பும் பழுதடைந்துள்ளதால் உள்ளதால் அதையும் இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே துவங்கியிருக்க வேண்டும். ஆனால், வீடுகளை பொதுமக்கள் காலி செய்யாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய வீடுகளை இடித்த பிறகு எவ்வளவு இடம் உள்ளது. எத்தனை பிளாக் கட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப கட்டுமான பணிகள் நடக்கும்’ என்றனர்.

Tags : Commencement ,demolition ,houses ,Sathyanagar ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்