×

பவானி அருகே சாக்கடையில் சாயக்கழிவு நீர் ஓடுவதால் மக்கள் அதிர்ச்சி

பவானி, அக்.18: பவானி அருகே சாக்கடையில் சாயக்கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பவானி நகர் மற்றும் செங்காடு, காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், பெரியமோளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாக்கடைகள் மூலம் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இக்கழிவுகள் சாக்கடை வழியாக பவானி ஆற்றுக்கு சென்று கலப்பதால் நீராதாரம் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை பண்டார அப்பிச்சி கோயில் எதிரில் உள்ள சாக்கடையில் சாயக்கழிவுநீர் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடியது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காடையம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர் குடிக்க தகுதியானதா என சோதனை செய்து அறிவிக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது மீண்டும் சட்டவிரோதமாக கழிவுகள் வெளியேற்றப்படுவது சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கழிவு நீர் சாக்கடை மூலம் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bhavani ,
× RELATED ரோட்டில் பாய்ந்த சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதி