×

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு

ஈரோடு, அக். 18: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து நேற்று அதிகரித்தது. ரூ.3 கோடி அளவுக்கு மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் மாடுகளை விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வந்து செல்கின்றனர். மாடுகளை வாங்க தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். கடந்த சில வாரமாக சந்தையில் மாடுகள் விற்பனையும், வரத்தும் குறைவாகவே இருந்தது.

தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் நேற்று நடந்த சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது. ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர்.இதில், 400 பசு மாடுகளும், 350 எருமை மாடுகளும், 300 வளர்ப்பு கன்றுகளும் கொண்டு வரப்பட்டது. இதில், பசு மாடுகள் 12 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 2 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. வழக்கமான விற்பனையை விட, நேற்று மாடு விற்பனையும், வரத்தும் அதிகமாக இருந்தது. நேற்றைய சந்தையில் 3 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனையானது.

இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,`கடந்த ஒரு மாதமாக நடந்த சந்தையில் பல பகுதிகளில் மழை பெய்ததால் மாடு வரத்து குறைவாகவே இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி செலவிற்காக மாடுகளை விற்பனை செய்வதற்காக அதிகமாக கொண்டு வந்தனர். சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் அரசின் சார்பில் மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கப்படுவதால் சந்தையில் 200 மாடுகள் வரை வாங்கி சென்றனர். நேற்று நடந்த சந்தையில் 90 சதவீத மாடுகள் 3 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானது. அடுத்த வாரம் மாடுகள் வரத்தும், விற்பனையும் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Tags : Karungalpalayam ,
× RELATED தொடர் மழை எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு