×

முதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணம் மூலம் மீண்டும் பதிவு திருமணம்

ஈரோடு, அக். 18:  முதல் திருமணத்தை மறைத்து போலி ஆவணம் தயாரித்து மீண்டும் பதிவு திருமணம் செய்த மனைவி மற்றும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் கணவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பெருமாள்மலை நகரை சேர்ந்த மணி மகன் ரமேஷ் (35). இவர் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த 2009ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அழகுகிணத்துப்பாளையத்தை சேர்ந்த நடேசன் மகள் ஹேமலதா (30) என்பவருடன் திருமணமானது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது. எங்கள் ஊரை சேர்ந்த பெருமாள் (40) என்பவருடன் எனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்து, நான் இருவரையும் கண்டித்தேன்.

இதனால், ஹேமலதா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், அங்கிருந்து எனது குழந்தைகளுடன் அவர் மாயமானார். விசாரணை நடத்தியதில், பெருமாளுடன் ஹேமலதா சென்றது தெரியவந்தது. இந்நிலையில், ஹேமலதா எனது உறவினர்களிடம் பெருமாளை முறைப்படி பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு உண்டான நகலையும் காட்டியுள்ளார். இதையடுத்து, நான் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், எனது மனைவியின் திருமண நகலை பார்த்தேன். அதில் ஹேமலதாவுக்கும், பெருமாளுக்கும் 12-03-2017ம் ஆண்டு திருமணம் நடந்தது போன்ற போலியான பத்திரிக்கை, முதல் திருமணத்திக்கான சான்றிதழ், விஏஓ சான்றிதழ் போன்றவற்றை தயாரித்து மோசடியாக திருமணத்தை பதிவு செய்துள்ளனர். எனவே, முதல் திருமணத்தை மறைத்து, போலி ஆவணம் மூலம் மீண்டும் பதிவு திருமணம் செய்த எனது மனைவி ஹேமலதா, பெருமாள், திருமணத்தை பதிவு செய்த பெருந்துறை சார்பதிவாளராக இருந்த பாலமுருகபிரபாகர் மற்றும் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED நடிகர் பிரபுதேவா ரகசிய திருமணம்