ஈரோட்டில் மீண்டும் வழிப்பறி தீவிர ரோந்து செல்ல உத்தரவு

ஈரோடு, அக்.18:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் மீண்டும் அரங்கேற துவங்கி உள்ளதால் தீவிர ரோந்து செல்ல போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயின் வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வந்தது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து வந்ததையடுத்து போலீசாரின் தீவிர ரோந்து, கண்காணிப்பு காரணமாக கட்டுக்குள் வந்தது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற துவங்கி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் கொடுமுடி, முள்ளாம்பரப்பு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இதேபோல், சித்தோடு முள்ளாம்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த வழிப்பறி ஆசாமிகள் தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்களது கைவரியை காட்டத் துவங்கி உள்ளனர். இந்நிலையில், வழிப்பறி மற்றும் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தீபாவளி முடியும் வரை அனைத்து போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு, பகல் நேரங்களில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: