×

புதுக்கோட்டையில் பாழடைந்த அரசு அலுவலர் குடியிருப்பு கட்டிடங்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,அக்.17: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பஸ்நிலையம் அருகிலும், தற்போதைய போலீஸ் குடியிருப்பு பகுதியிலும் நீண்ட காலத்திற்கு முன்பு அரசு அலுவலர்கள் குடியிருப்பு இருந்து வந்தது. சுமார் 12 வீடுகள் இருந்து வந்த இங்கு, ஆலங்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வசித்து வந்தனர். ஆனால் கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை பலகீனமடைந்தன. இதனால் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் பயனற்று கிடக்கின்றன. இந்நிலையில் தற்போது சமூகவிரோதிகள் மது அருந்துவது உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி பஸ்நிலையம், போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் என முக்கிய அலுவலகங்களுக்கு இடையே இக்கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது.

எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் இக்கட்டிடத்தை சீரமைத்து ஆலங்குடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் இயங்கிவரும் மகளிர் காவல்நிலையம், வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் போக்குவரத்து போலீஸ் நிலையம், நெடுஞ்சாலைதுறை அலுவலகம், மதுவிலக்கு காவல் நிலையம் உட்பட ஆலங்குடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை சொந்த கட்டிடத்தில் இயங்கவைப்பதோடு வாடகை இல்லாமல் அரசு பணத்தை சேமிக்க முடியும். எனவே, பாழடைந்த அரசு அலுவலர்களின் குடியிருப்பு கட்டிடங்களை சீரமைத்து வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pudukkottai ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை