×

தமிழக மீனவர்களை கடலுக்கு செல்லும்போதே கைது நடவடிக்கை இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தை தடுக்க கோரிக்கை

அறந்தாங்கி, அக்.17: எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை சிறைபிடித்து வந்த இலங்கை கடற்படையினர் சமீபகாலமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, அவர்களை கைது செய்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாகக் கூறி, சிறைபிடிப்பது தொடர்கதையாகி வருகிறது. வழக்கமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்பிடித்து கரை திரும்பும்போதோ, வலைகளை கடலுக்குள் வீசிவிட்டு, காத்திருக்கும் நேரத்திலோ, இலங்கை கடற்படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இவ்வாறு சிறைபிடிக்கும்போது, தமிழக மீனவர்கள் கடலில் பிடித்து வைத்திருந்த மீன், வலை போன்றவற்றை விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதே, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை வழிமறித்து, மீனவர்களை சிறைபிடிப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோட்டைபட்டினம் மீனவர்கள் வழக்கம்போல் காலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றபோது நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களின் விசைப்படகை வழிமறித்து மீனவர்களை கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறியது: இலங்கை கடற்படையினர் முன்பெல்லாம் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைதுசெய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து, கைது செய்கின்றனர். இவ்வாறு கடலுக்கு செல்லும்போதே மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல், தமிழக கடற்கரையில் இருந்து வாக்கிடாக்கி மூலம், மற்ற தமிழக மீனவர்களுக்கு தெரியவருகிறது. உடனே அவர்கள் தாங்களும் இலங்கை கடற்படையினரிடம் சிறைபட்டு விடுவோமோ என்ற அச்சத்தில், அரைகுறையாக அதுவரையில் பிடிக்கப்பட்டு மீன்களுடன் கரை திரும்புகின்றனர். இலங்கை கடற்படையினர் குறித்த அச்சத்துடன் மீனவர்கள் குறைவான மீன்களை பிடித்துக் கொண்டு, கரை திரும்புவதால் அவர்கள் பெரிய அளவில் இழப்புக்கு உள்ளாகின்றனர் என்று கூறினார்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போதே மீனவர்களை சிறைபிடித்து, மற்ற மீனவர்களை அச்சப்படுத்தி வருவதால் மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sri Lankan ,navy ,arrest ,fishermen ,Tamil Nadu ,
× RELATED இலங்கை மக்களுக்கும், நாட்டிற்கும்...