×

கொசு உற்பத்தியாகும் வகையில் பாட்டில்கள் கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் நகராட்சி நிர்வாகம் அதிரடி

புதுக்கோட்டை, அக்.17: புதுக்கோட்டை நகரில் எளிதில் கொசு உற்பத்தியாகும் வகையில் ஏராளமான காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் நிறைந்து கிடந்த கட்டிட உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தி தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக தினம் ஒரு தெருக்களில் தூய்மைப்பணி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று காலை நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் போஸ் நகரில் தூய்மைப்பணியை முடித்துவிட்டு, மார்த்தாண்டபுரம் நுழைந்தனர். அங்குள்ள பழைய பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு மாடியிலும், தாழ்வாரப்பகுதியிலும் ஏராளமான காலி மதுப்பாட்டில்கள், காலி தண்ணீர் பாட்டில்கள் ஏராளம் கிடந்தன. ஏறத்தாழ அந்த கட்டிடமே இரவில் மது அருந்தும் இடமாக இருந்திருக்கக்கூடும் என நகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற காலி பாட்டில்கள் இருந்தால், மழை பெய்யும்போது அவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு முட்டை வைத்து கொசுப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும். இதுபோன்ற கொசு உற்பத்திக் காரணிகளை அழிக்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கவும் சட்ட விதிகள் திருத்தப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் ஒரு லாரி அளவில் ஏற்றக் கூடிய பாட்டில்கள் இருந்த பயன்படுத்தப்படாத இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் மணி என்பவருக்கு அலட்சியமாக இருந்ததாக ரூ. ஒரு லட்சம் அபராதம் நகராட்சிப் பணியாளர்களால் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள், தூய்மைப்பணி தினமும் நடத்தப்படும் என்றும் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags : administration ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...