×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி காயமடைந்தோருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.17: இடி மின்னல் தாக்கி படுகாயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான சங்கர், மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழுதாம்பட்டி சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று விவசாய கூலி வேலை செய்து கொண்டிருக்கும் போது இடமின்னல் தாக்கியது. இதில் வைத்தூரை சேர்ந்த எத்திராஜ் மனைவி சாந்தி(35), ஆறுமுகம் மனைவி விஜயா(47), ராஜேந்திரன் மனைவி கலைசெல்வி(45) தொழுதாம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன் மனைவி லெட்சுமி அம்மா(65) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். படுகாமடைந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு என்பது போதுமானதல்ல. இறந்துபோன விவசாயத் தொழிலாளர்களை நம்பியுள்ள குடும்பத்திற்கு நிவாரண தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், விபத்தில் படுகாயமடைந்த விவசாய தொழிலாளர்களில் பலர் குணமடைந்தாலும் பழையபடி வேலைக்கு கூலிவேலைக்கு செல்லும் வகையில் உடல் தகுதியுடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்ட வேண்டும். மேலும், காயத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.5 லட்சம் வரை அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government ,Pudukkottai district ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்