பாலக்கரை சோழன்நகரில் பல மாதமாக அகற்றப்படாத குப்பையால் சுகாதார கேடு அதிகாரிகள் அலட்சியம்

கும்பகோணம், அக். 17: கும்பகோணம் பாலக்கரை சோழன்நகரில் பல மாதமாக குப்பைகளை அகற்றாமல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் பாலக்கரை சோழன்நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. இதேபோல் சோழன் நகரிலிருந்து கோடையான் தோடட்டத்துக்கு காவிரி ஆற்றின் குறுக்கே போடப்பட்ட பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், மின்சாரத்துறைக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகாரளித்ததால் குப்பை கொட்டும் டிரம்மை தலைகீழாக போட்டு விட்டு நகராட்சி ஊழியர்கள் சென்றுவிட்டனர். அப்பகுதியில் உள்ளவர்கள், குப்பைகளை சாலையிலேயே கொட்டி வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதில் புழுக்கள் உற்பத்தியாகி அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதியினர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மழை காலத்தில் டெங்கு போன்ற விஷ காய்ச்சல் வரும் நிலையில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் கழிவு குப்பைகளால் அப்பகுதியில் பல்வேறு நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.எனவே பாலக்கரை சோழன்நகரில் சாலையோரம் கொட்டியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் குப்பைகளை திரட்டி கொண்டு வந்து நகராட்சி அலுவலகத்திற்கு முன் கொட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: