பள்ளி மாணவர்கள் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை

கும்பகோணம், அக். 17: தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டுமென தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை வழங்கினார்.கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்து பேசுகையில், பட்டாசுகளை வெடிக்கும்போது நீளமாக உள்ள ஊதுபத்தியை பயன்படுத்த வேண்டும். அதன்முன் 2 வாளிகளில் தண்ணீரும், மணல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பட்டாசுகளை வெடிக்கும்போது உடைகள் காற்றில் பறக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். சில்க் துணிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.கூரை வீடுகள், மருத்துவமனை, பள்ளி கூடங்கள் இருந்தால் அதன் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. கட்டிடங்கள், போக்குவரத்து நெரிசலான சாலைகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, சிறிய பட்டாசுகளை கையில் வைத்தும், ஏதேனும் பொருட்கள் மேல் வைத்தும் வெடிக்கக்கூடாது.பட்டாசுகளை வெடிக்கும்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: