ராஜராஜசோழன் சதய விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு

தஞ்சை, அக். 17: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாமன்னன் ராஜராஜசோழன் 1034வது சதயவிழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசும்போது, சதய விழா தொடர்பான தற்காலிக சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்ட சுற்றுலா வெளியீடுகளை விநியோகம் செய்ய வேண்டும்.மாமன்னன் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக தொல்லியல்துறை மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்களை மாவட்ட சுற்றுலா அலுவலர் தலைமையில் விநியோகிக்க வேண்டும்.கலைநிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம் முதலிய கலைநிகழ்ச்சிகள் நடத்த தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் ஏற்பாடு செய்ய வேண்டும். விழாவிற்கு பந்தல் அமைப்பது, மின் அலங்காரம் செய்வது, நேரடி ஒலிபரப்பு செய்தல் ஆகிய பணிகளை மத்திய தொல்பொருள் துறை முதுநிலை பாதுகாப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டும். சதய விழாவையொட்டி நவம்பர் 5 முதல் 6ம் தேதி வரை 2 நாட்களுக்கு நடைபெறும் கலைநிகழச்சிகள் தொய்வின்றி நடத்த கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் ஏற்பாடு செய்ய வேண்டும்.சதய விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை சத்திர நிர்வாகம் தனி தாசில்தார் வழங்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இடையே ராஜராஜசோழன் சிறப்புகள் பற்றிய பேச்சு போட்டி நடத்தி பரிசு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சதய விழா நடைபெறும் 2 நாட்களும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) வைத்திருக்க வேண்டும். சதய விழா நடைபெறும் 2 நாட்களும் சுகாதார பணிகளை கொண்டு கோயில் வளாகத்தை தூய்மையாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் வைத்து கொள்ள வேண்டும். திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் இயக்க வேண்டும்.தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தயார் நிலையில் இருக்க வேண்டும். சதய விழாவையொட்டி பொதுமக்கள் கோயிலில் 2 நாட்களுக்கு அதிகளவில் கூடுவர் என்பதால் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

கூடுதலாக காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் பெரிய கோயிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தூய்மையாக வைத்து கொள்ளுதல், பக்தர்களுக்கு குடிநீர் தொட்டி அமைத்தல், நகர மைய பகுதிகளில் மின் அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும். விழா தொடர்பான அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: