டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 3 மீன் விற்பனை நிலையத்துக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிப்பு கலெக்டர் அதிரடி

தஞ்சை, அக். 17: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கலெக்டர் அண்ணாதுரை சந்தித்தார்.அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, மருத்துவ பரிசோதனை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டிட அறைகள் மற்றும் வளாகம் தூய்மையாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக தஞ்சை முனிசிபல் காலனி குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகிறதா என கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். இதைதொடர்ந்து முனிசிபல் காலனி பகுதியில் உள்ள மீன் விற்பனை கூடங்களில் ஆய்வு செய்து அங்கு டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்தார்.

இதையடுத்து 2 மீன் விற்பனை கூட உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ஒரு மீன் விற்பனை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து முனிசிபல் காலனி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையம், கிட்சி பள்ளியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.அப்போது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளுமாறு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், சுகாதார பணிகள் துறை இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: