×

காங்கயம் பேருந்து நிலையத்தில் இடைவெளி இல்லாமல் நிறுத்தப்படும் பஸ்கள்

காங்கயம், அக். 17:  காங்கயம் பஸ் நிலையத்திற்கு வரும் பெரும்பாலான பேருந்துகள் இடைவெளி இல்லாமல் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காங்கயத்தில் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. கோவை-திருச்சி, திருப்பூர்-திருச்சி, சேலம்-பழனி, ஈரோடு- தாராபுரம் என முக்கிய நகரங்களை இணைக்கும் பேருந்து நிலையமாக காங்கயம் பேருந்து நிலையம் உள்ளது. கோவையிலிருந்து திருச்சிக்கு, ஈரோட்டிலிருந்து பழனிக்கு, திருப்பூரிலிருந்து கரூருக்கு செல்லும் பேருந்துகள் காங்கயம் பேருந்து நிலையத்திற்கு வருகின்றன. அவ்வாறு வரும் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் டீ, காபி, குடிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

ஆனால் பேருந்துகள் டைமிங் பிரச்னை, கலெக்சன், போக்குவரத்து கோட்ட வேறுபாடு போன்ற காரணங்களால் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொள்வதோடு, ஓட்டுநர், நடத்துனர்களுக்கிடையிலான தகராறுகள் அடிக்கடி நடக்கிறது. மேலும் ஒரு பேருந்தை ஒட்டி மற்றொரு பேருந்து நிறுத்தப்படுவதால் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வழியில்லாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது: கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேருந்தில் பயணம் செய்து இங்கு வந்துள்ளோம். பெண்கள், வயதானவர்கள் இறங்கி சென்று இயற்கை உபாதைகளை கழிக்க கூட வழியில்லாமல் இப்படி இடைவெளி இல்லாமல் நெரிசலுக்கிடையில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இனி அடுத்து கரூரில்தான் பேருந்து நிற்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளின் வருகை அவர்களின் சிரமங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். என்றார்.

Tags : break ,Kangayam ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...