×

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் வேளாண் இயந்திரம், கருவிகள் வாடகை மையம் அமைக்கலாம்

ஊட்டி, அக். 17: ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைத்திட விவசாயிகள், மகளிர் குழுக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது,சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்த வாடகையில் பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் என இரண்டு எண்கள் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.  மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம், இந்த மையங்களை அமைத்திட விரும்புவோர் முதலில் அதற்குரிய விண்ணப்பத்தினை நீலகிரி மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுலவலகத்தில் அளிக்க வேண்டும்.

மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பயனாளியின் மானிய இருப்பு நிதிக்கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அவர்கள் சரிபார்த்த பிறகு மானி இருப்பு தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு எண்கள் வாடகை மையங்கள் அமைத்திட ரூ.20 லட்சம் மானியத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக வருவாய் ேகாட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் செயற் பொறியாளரை 94431 02305 என்ற கைபேசி எண்ணிற்கும், ஊட்டி உதவி செயற்பொறியாளரை 94435 66451 என்ற செல்போன் எண்ணிற்கும், கூடலூர் உதவி செயற்பொறியாளரை 99428 92084 என்ற செல்போன் எண்ணிற்கும், குன்னூர் உதவி செயற்பொறியாளரை 94438 99927 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

Tags : Rs ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...