×

மண், நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தால் மக்கள் அச்சம்

ஊட்டி, அக். 17:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்திருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே தற்போது மாவட்டத்தில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னூர், குந்தா, கோத்தகிரி மற்றும் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னலுடன் பெய்யும் இந்த மழையால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 15ம் தேதி இரவு மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், கேத்தி பாலாடா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. அதேபோல், இப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் பகல் நேரங்களில் ஊட்டி, குந்தா மற்றும் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை கொட்டியதால், மார்க்கெட், படகு இல்லம் சாலை, காந்தல், கூட்செட், லோயர் பஜார் சாலை போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மார்க்கெட்டில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்றும் பிற்பகலுக்கு மேல் ஊட்டியில் மழை பெய்தது. இம்முறை வடகிழக்கு பருவமழை தாக்கம் சற்று அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்திலும், நிலச்சரிவு ஏற்படும் அச்சத்திலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். தற்போது நாள் தோறும் மழை அதிகமாக பெய்து வரும் நிலையில், அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் : ஊட்டி 38, கல்லட்டி 13, குந்தா 31, அவலாஞ்சி 8, எமரால்டு 7, குன்னூர் 15, கெத்தை 15, பர்லியார் 10, கோத்தகிரி 10, கோடநாடு 16.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்