×

தொடரும் கடத்தல் சம்பவங்கள் பதறவைக்கும் பைபாஸ் ரோடு

கோவை, அக்.17: கோவை மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோடு கடத்தல் சம்பவங்களால் அபாய பகுதியாக மாறிவிட்டது. கோவை மதுக்கரை மரப்பாலம் முதல் அவிநாசி ரோடு நீலம்பூர் வரை 26 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. 13 பாலம், 17 முக்கிய சந்திப்பு என இந்த பைபாஸ் ரோடு மாநில எல்லைக்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டாக பைபாஸ் ரோட்டில் பதற வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி மக்களை அதிர வைத்துள்ளது. மின் விளக்கு இன்றி எப்போதும் இருள் மயமாக காணப்படும் இந்த ரோட்டில் திருடர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி வருகின்றனர். செட்டிபாளையம் ரோடு சந்திப்பு, போடிபாளையம் ரோடு சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு சந்திப்பு, சிந்தாமணிப்புதூர் சந்திப்பு, நீலம்பூர் சந்திப்பில் சரக்கு லாரிகள் அதிகம் நிறுத்தப்படுகின்றன. லாரிகளில் பணம், பேட்டரி மட்டுமின்றி சில நேரங்களில் தார் பாய் அறுத்து பொருட்களை கொள்ளையடிப்பதும் நடக்கிறது. டிரைவர், கிளீனர்கள் தூங்கினால் லாரியை கடத்தி விடுவதும் நடக்கிறது. லாரிகளில் அபாய கழிவுகளை கொண்டு வந்து ரோட்டோரத்திலும், கல்லுக்குழியிலும் ெகாட்டுவதும் நடந்தேறுகிறது.  ரோட்டோரம் நிற்கும் காதல் ஜோடிகளை மிரட்டுவதும், பணம் பறிப்பதும் அடிக்கடி நடக்கிறது. மதுக்கரை, ஈச்சனாரி, செட்டிபாளையம் பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் கொலை சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

போடிபாளையம் பிரிவு ரோட்டில் 3 ஆண்டிற்கு முன் 2.5 கோடி ரூபாயுடன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது ஹவாலா பணம் என தெரியவந்தது. பரமத்தி போலீசார் 3 கோடி ரூபாய் ஹவாலா பணத்துடன் காரை கடத்திய சம்பவமும் பைபாஸ் ரோட்டில் அரங்ேகறியது. எரிசாராயம், மணல், ரேஷன் அரிசி, செம்மரம், சந்தனமரம் போன்றவை பைபாஸ் ரோடு வழியாகவே கேரள எல்லைக்குள் நுழைவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் மாடுகளை பைபாஸ் ரோட்டில் சிறை வைப்பதும் அடிக்கடி நடக்கிறது. பைபாஸ் ரோட்டை மதுக்கரை, போத்தனூர், செட்டிபாளையம், சிங்காநல்லூர், சூலூர் போலீசார் கண்காணிக்கின்றனர். இது தவிர நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் பைபாஸ் ரோட்டில் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான கடத்தல் வாகனங்களை ரோந்து போலீசார் கண்டுகொள்வதில்லை.

நகர், புறநகர் பகுதி போலீசார் எல்லை விவகாரத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கவில்லை என கூறப்படுகிறது. புறநகர் பஸ் ஸ்டாண்ட், லாரி பேட்டை, தொழில் பேட்டை என பைபாஸ் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. ஆனால் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகள் குறைவினால் பைபாஸ் ரோடு அபாய பகுதியாக மாறி விட்டது. இதை தடுக்க போலீசார் ஒருங்கிணைந்த கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவேண்டும். 5 போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும். 24 மணி நேர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவேண்டும். கடத்தல் வாகனங்கள், கொள்ளையர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பைபாஸ் ரோடு மீதான பயம் குறையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Tense Bypass Road ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்