×

தனியார் பஸ்சில் ஏர்ஹாரன் பறிமுதல்

ஈரோடு, அக். 17: ஈரோட்டில் போக்குவரத்து விதிமீறி தனியார் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு அருகே பழனிக்கவுண்டன்பாளையத்தில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓடப்பள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.  அவர், பல இடங்களில் அதிகம் சத்தம் எழுப்பும் ஏர்ஹாரனை ஒலித்தபடி வந்தார். இதனால் ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பஸ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வந்தபோதும் அதிக சத்தம் எழுப்பியதால் அப் பகுதி மக்கள் எஸ்பி சக்திகணேசனுக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர், எஸ்.ஐ., விஜயகுமார் ஆகியோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். அதிவேகமாக வந்த பஸ், பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது அந்த பஸ்சில்  போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது டிரைவர் சக்திவேல் சீருடை அணியாமல் இருந்தார். மேலும், ஏர்ஹாரன் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. பின்னர் டிரைவர் சக்திவேல், பஸ் உரிமையாளர் ஈரோடு மூலப்பாளையம் எல்.ஐ.சி.நகரைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இதில், சீருடை அணியாமல் பஸ்சை ஓட்டியது, அதிக வேகமாக ஓட்டி வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கான அபராத தொகையை ஈரோடு மொபைல் கோர்ட்டில் செலுத்தவும் உத்தரவிட்டனர். பொதுமக்கள் செல்போன் மூலமாக புகார் அளித்த சில நிமிடங்களிலேயே பஸ் ஸ்டாண்டில் அதிவேகமாக வந்த பஸ்சை நிறுத்தி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.,சக்திகணேசனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Airharan ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு