×

வெள்ளோட்டில் தனியார் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புகையால் சுற்றுச்சூழல் மாசு

ஈரோடு, அக். 17:  வெள்ளோட்டில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் புகையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திபாலமுருகன் ஊர் பொதுமக்கள் கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளோடு பள்ளப்பாளையத்தில் தனியார் பேப்பர் மில் இயங்கி வருகிறது. இங்கிருந்து வரும் வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர், நிலத்தில் கலப்பதாலும் மற்றும் குழி தோண்டி கழிவு பொருட்களை நிலத்தில் மூடி விடுவதாலும் அருகில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மாசுப்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கிறது.

இந்த மில்லில் இருந்து வரும் நச்சு புகையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்படுகிறது. பள்ளப்பாளையம் மட்டுமல்லாமல் தொட்டிபாளையம், சிறுவன்காட்டு வலசு, ராச்சம்பாளையம் போன்ற 4 கிராம மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
குடியிருப்புகளும், விவசாய பூமியும் இருப்பதால் இந்த பேப்பர் மில்லினை சிப்காட் போன்ற தொழில்பேட்டைக்கு மாற்றி, எங்கள் 4 கிராமத்தின் சுற்றுச்சூழலையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர். இதுதவிர, பள்ளப்பாளையம் கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரை, வாட்டர் பாட்டிலில் பிடித்து எடுத்து வந்து புகார் மனு அளித்தனர். அந்த நீர் மிகுந்த துர்நாற்றத்துடன் இருந்தது. இதை பரிசோதித்த கலெக்டர் கதிரவன், கிணற்று நீரை ஆய்வு செய்ய பரிந்துரை செய்தார். மேலும், சம்மந்தப்பட்ட பேப்பர் மில் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : mill ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு