×

கட்டுமான பணி நடக்கும் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

ஈரோடு, அக்.17: ஆபத்தை உணராமல் கட்டுமான பணி நடைபெறும் வகுப்பறையிலேயே மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தும் அவலம் கொங்காடை மலைப்பள்ளியில் நடந்து வருகிறது. அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை கிராமம் உள்ளது. இங்கு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளியாக இருந்தது, தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் 277 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்விநிலை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், தற்போது மாணவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணி கடந்த சில மாதமாக நடந்து வருகின்றது. இக்கட்டிடத்தில் கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் முட்டு பிரிக்காமல் அப்படியே உள்ளது. பூச்சு வேலை, தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆபத்தை பற்றி உணராமல் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவலநிலை இருந்து வருகிறது.

பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை என்பதற்காக கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தில் மாணவர்களை அமர வைப்பது என்பது மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது:மலைப்பகுதியில் உள்ள பள்ளிகள் பெரும்பாலும் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியர் நியமனம், மாணவர்கள் நலன், அடிப்படை வசதிகள் என எதையும் பள்ளி கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற பள்ளிகள் செயல்படுகிறதா? என்பது கூட தெரியாத நிலையில் நலத்துறையினர் செயல்பாடுகள் உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறைக்கு புகார் அனுப்பினோம். ஆனால் இப்பள்ளி, தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். நலத்துறை அதிகாரிகளோ நமக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியில் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கும் ஒரு வகுப்பறையில் ஆபத்தான நிலையில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்தும் அவலம் இருந்து வருகிறது. இதைபற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது. இப் பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Teachers ,classroom ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...