×

பால் மாடுகளுக்கு தீவனமாகும் சத்துமாவு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சாயல்குடி, அக். 17: அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துமாவு பாக்கெட்களை பால்மாடு தீவனங்களுக்காக விற்றுவருவதால், குழந்தைகள் ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1,556 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் படிக்கும் 6 வயதுள்ள குழந்தைகள், கிராமத்திலுள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சத்து மாவு இலவசமாக இணை உணவாக வழங்கப்படுகிறது. இதில் குழந்தைகள், தாய்மார்களுக்கு தேவையான சத்துமாவு கலவையுடன் கோதுமை மாவு, சோயா மாவு, கேழ்வரகு, செறிவூட்டப்பட்ட பாமாயில், வெல்லம், தாது உப்புகள், விட்டமின் நிறைந்த சத்துமாவு கலக்கப்பட்ட இணை உணவாக வழங்கப்படுகிறது. 2 கிலோ எடையுள்ள இந்த மாவு பாக்கெட்டை சிலர் வெளிமார்க்கெட்டில் பால்மாடுகளுக்கு வழங்கி வந்தனர். இதனால் கடந்த 2017ல் இணை உணவு தயாரிக்கப்படும் முறை மாற்றப்பட்டு, முழுக்க, முழுக்க மனித சக்திகள் மட்டுமே சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விபரீதம் தெரியாமல் அங்கன்வாடி மையங்களில் வழங்கக் கூடிய மாவு பாக்கெட்டை தற்போது பால் மாடுகளுக்கு கொடுத்து வருவதால் மாடுகளுக்கு பின்விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பெரும்பாலான ஊர்களில் பால்மாடுகளுக்கு 2 கிலோ பாக்கெட்டை ரூ.25க்கு விற்று வருகின்றனர். பால் மாடுகளுக்கு வைக்கப்படும் தண்ணீருடன் இந்த மாவை கலந்து வைப்பதனால், ருசியாக இருப்பதால் மாடுகளும் அதிகளவில் சத்து மாவு கலவை தண்ணீரை குடித்து வருவதாவும், பால் அதிகமாக கறப்பதாகவும் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி பண்ணையாக வைத்து கறவைமாடு வளர்ப்போர் வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் பண்ணையிலேயே வளர்ப்பதனால் அதிகளவில் இந்த மாவு பாக்கெட்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.இதனால் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் மாவு தட்டுப்பாடு நிலவி, குழந்தைகள், தாய்மார்களுக்கு அரை உருண்டை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே அங்கன்வாடி மையங்களில் முறையாக மாவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : county administration ,
× RELATED ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை