×

அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

சாயல்குடி, அக். 17:  எம்.கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்களை கல்வி சீர்வரிசையாக கிராமமக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர். கடலாடி ஒன்றியம், எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர், ஊர் மக்களின் முழு ஒத்துழைப்போடு இயங்கி வருவதால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக கிராமமக்கள் இணைந்து  பள்ளி மற்றும் மாணவர்களுக்கு தேவையான தளவாட பொருட்கள், விளையாட்டு உபகரணங்களை கல்வி சீர் பொருட்களாக  வழங்கினர். பொருட்களை பெற்றோர், மாணவர்கள்  ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வீரமாளி வரவேற்றார். பீரோ, சேர், டேபிள், மின்விசிறி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட  பொருட்களை பெற்றோர் மேளதாளம் முழங்க, குலவை சத்தம் போட்டு  கிராமத்தை சுற்றி வந்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர். பிறகு இளைஞர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை விமலிட்டா, ஊராட்சி செயலர் மா, கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,government school ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா