×

வங்கியில் உதவித்தொகை செலுத்துவதால் பணம் எடுப்பதில் முதியோர் அலைக்கழிப்பு

சாயல்குடி, அக்.17:  முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளும் வங்கி கணக்கில் செலுத்துவதால், முதியோர் அலைச்சலுடன் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் முதியோர் உதவி தொகை, விதவை உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பெயர்களில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 50ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.50ல் தொடங்கி தற்போது ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலகம் மூலம் வீடுகளுக்கே சென்று அஞ்சல் ஊழியர்கள் முதியோரிடம் உதவித்தொகை, பென்சன் உள்ளிட்டவைகளை வழங்கி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து உதவித்தொகைகளும் வங்கியில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து உதவித்தொகை பெறுபவர்கள் வங்கியில் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அப்பகுதியில் உள்ள நகரத்தில் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு தொடங்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு வங்கி கணக்கு தொடங்கவே முதியோர் கடும் அவதியடைந்த நிலையில், உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் முதியோர் பணம் இன்னும் வரவாகவில்லை என்று வங்கியில் கூறியதும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து நாள் முழுவதும் காத்திருந்து அதிகப்படியான கூட்டங்களுக்கிடையே உதவித்தொகையை பெற்றுச் செல்ல முதியோர் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக கிராமங்களில் வீட்டில் இருந்தபடியே உதவித்தொகை பெற்றோம். வங்கியில் செலுத்துவதால் வேறு ஒருவரின் உதவியோடுதான் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க வரவேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவு, அலைச்சல், உடல் நலமின்மை ஏற்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்கேற்பவே அவர்களுக்கான திட்டங்கள் இருக்க வேண்டும். வங்கியில் வந்து பெறுவதற்கு பதில் மாற்று ஏற்பாடு செய்தால் மட்டுமே நன்மையானதாக இருக்கும் என்றனர்.

Tags : bank ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...