×

அரசு அலுவலகங்களை சுத்தமாக பராமரித்து அறிக்கை தர வேண்டும்

மதுரை, அக். 17: அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரித்து 3 நாளில் அறிக்கை தர வேண்டும் என கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். துரை கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கயுள்ள நிலையில் மழையின் காரணமாக தேங்கியுள்ள நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏதும் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.  பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தக்கொள்வதற்கு எடுத்துக்காட்டாக அரசு அலுவலங்களில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, மாநகராட்சி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். இதனை 3 நாளில் செய்து முடித்து அறிக்கை கொடுக்க வேண்டும்.  அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகை, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்கள் முற்றிலும் பயன்படுத்தக்கூடாது.

போக்குவரத்து பணிமனைகளில் பயன்பாடின்றி உள்ள டயர்களில் நீர் தேங்காதவாறு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ரயில்வே நிலையங்களில் குப்பைகள் ஏதும் சேராத வண்ணம் அவ்வப்போது சுத்தப்படுத்துதால், டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க முடியும்.      பயன்படுத்தாத தொட்டிகள், டயர்கள், தேங்காய் நார்கள், பெயிண்ட் டின்கள் போன்ற பகுதிகளில் நீர் தேங்காதவாறு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் என தெரிந்தால், உடனடியாக முறையாக சிகிச்சை வழங்க வேண்டும்.  மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்கவும். அனைத்து பள்ளிகள், பொது இடங்களில் நிலவேம்பு குடிநீரை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து திரையரங்குகளிலும் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.   நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், துணை ஆணையர்  நாகஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், டீன் வனிதா, இணை இயக்குநர் டாக்டர் சிவக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government offices ,
× RELATED அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்